Saturday, December 12, 2009

சாகேதராமன் - சிவகாமி பெத்தாச்சி அரங்கம் - ப்ரம்மகான சபா

0 comments


பெங்களூர்வாசியான சாகேதராமன், "கோல்ட்மேன் சாக்ஸ்"ல் பணி புரிகின்றார். அவரது கச்சேரி நேற்று ப்ரும்மகான சபாவின் ஆதரவில் சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்றது. லால்குடியின் சிஷ்யரும், விசாகா ஹரியின் சகோதரருமான சாகேதராமன் கச்சேரிக்கு நிச்சயம் ஏமாற்றாது என்றெண்ணி, இந்த சீசனுக்கு போணி செய்தேன்.

முதலில் "ஏராநாபை" என்ற தோடி வர்ணத்தில் துவக்கினார். அடுத்ததாக கல்யாணியில் மெலிதாக ஆலாபனை செய்து, "வாசுதேவயனி வெரலின" என்ற கல்யாணியில் புகழ்பெற்ற சாகித்யம் பாடி களத்தினைத் தயார் செய்து கொண்டார்.

மூன்றாவதாக வந்தது முகாரி. ராக ஆலாபனை செய்தார். பாட ஆரம்பிக்கும் முன் தடங்கல். 2589 Opel கார் உரிமையாளர் காரை எடுக்க வேண்டுமென்ற அபத்தமான அறிவிப்பு. இது போன்ற விஷயங்களுக்கு நான் சொன்ன இந்த யோசனையைப் பின்பற்றலாமே. "கன்றின் குரலைக் கேட்டு" என்று அனுபல்லவியில் துவக்கினார். "இன்றைக்கு சிவ கிருபை வருமோ" என்ற இந்த தமிழ்ப் பாடலை விஸ்தாரமாகப் பாடியது தெம்பாக இருந்தது. ஆனால், சில சமயங்களில், 'சிவ' என்ற பதத்தை "ஷிவ" என்று பிரயோகித்தார்.

முகாரியில் அழுது மூட் அப்செட் ஆன ரசிகர்கள் அடுத்த பாடலில் துள்ளிக் குதித்து உட்கார்ந்தனர். காரணம் "சாகேத நீகேதன" என்று துவங்கிய பாடல். தனது பெயரிலே துவங்கும் பாடல் பாடியது எல்லோரையும் விழிக்கச் செய்த்தௌ ஒரு காரணமென்றால், விறுவிறுப்பான "கன்னடா" ராகம் ம்ற்றொமொரு காரணம். (கானடா அல்ல). ஸ்வரமும் பாடினார்.

கச்சேரியின் பிரதான பாட்டு மோகனத்தில் அமைந்த "மோகன ராமா". படினைந்து நிமிடங்களுக்கு மேல் ராக ஆலாபனை செய்தார். மோகனத்தின் மொத்தப் பரிணாமத்தையும் இந்தப் பதினைந்து நிமிடங்களில் காட்டினார். வெங்கட்ராமன் வயைன் முழு ஒத்துழைப்பு. நெரவல், ஸ்வரமும் இருந்தது.
பல்லடம் ரவி, சுந்தர்குமார் இருவரும் இந்த உருப்படிக்குத் தனியாவர்த்தனம் வாசித்து கச்சேரியினப் பரிமளிக்கச் செய்தனர்.

நிகச்சியின் நிறைவாக, "புல்லாகி" என்ற பாடலை சாவேரி மற்றும் தன்யாசி ராகங்களில் விருத்தமாகப் பாடினார். பின்னர் அதனையே, கோபால கிருஷ்ண பாரதியின் பேவரைட் ராகமான பெஹாக்கில் பாடி, அவரின், "இரக்கம் வராதென்ன சுவாமி" என்ற பாடலை பெஹாக்கில் முடித்தார். இந்த பெஹாக்கும், முன்னதாகப் பாடிய மோகனமும்தான் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்

இந்த சீசனுக்கு சென்ற முதல் கச்சேரி நிறைவாக அமைந்தது மகிழ்ச்சி. மேலும், கூடுதலாக பெத்தாச்சி அரங்கைவிட்டு வெளியே வந்து "மயிலல மசாலா"வில் சாப்பிட்ட வெந்தயத் தோசையும், கறிவேப்பிலை தோசையும் அருமை. அடுத்த முறை நீங்களும் முயற்சிக்கலாமே!

- சிமுலேஷன்